News Update :

Cinema News

Tamilnadu News

Today News

Cine Gallery

World News

Showing posts with label political. Show all posts
Showing posts with label political. Show all posts

நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பகல் கனவு காண்கிறார்

Friday, August 16, 2013

நமது நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பகல்கனவு காண்கிறார் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குஜராத் முதல்வராக பதவிவகிக்கும் நரேந்திரமோடி, நமது நாட்டின் பிரதமராக பகல்கனவு காண்கிறார். இந்த பகல் கனவு நனவாகாது. பிரதமர் மன்மோகன்சிங்கின் சுதந்திரதின உரையை நரேந்திரமோடி கடுமையாகவிமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பிரதமர் போன்ற பெரிய பதவிவகிப்பவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டால், பிரதமராகிவிடமுடியும் என்று நரேந்திரமோடி கருதுகிறார்.
நமதுநாட்டில் வளர்ச்சிப்பணிகளில் குஜராத் முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி பொய்யான தகவலை கூறிவருகிறார். மத்திய திட்டக்குழுவின்படி, வளர்ச்சிப்பணிகளில் குஜராத் மாநிலம் 10-12-ஆவது இடத்தில் உள்ளது. வளர்ச்சிப்பணிகளில்  கேரளம், மகாராஷ்டிரம், ஹரியாணா முன்னணி மாநிலங்களாக உள்ளன. வெற்றுப்பேச்சுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டுவர நரேந்திரமோடி பாடுபட வேண்டும்.

சுதந்திரதினத்தன்றே பிரதமரின் உரையை விமர்சித்த உதாரணங்கள் நமது நாட்டில் இருந்ததில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கின் உரைக்கு சுதந்திரதினவிழா உரையில் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பாஜக மூத்தத்தலைவர் அத்வானியே கருத்து தெரிவித்திருக்கிறார். நரேந்திரமோடியின் நடவடிக்கை யோக்கியமானதாக இல்லை.
பெங்களூரு ஊரகம் மற்றும்மண்டியா மக்களவை தொகுதிகள் மற்றும் சித்ரதுர்கா, தார்வாட், மைசூர் ஆகிய 3 சட்டமேலவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிவாகைச்சூடவுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நிலவும் சூழலை கவனித்தால், காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளதை உணரலாம். இத்தொகுதிகளில் 2 நாள்களுக்கு பிரசாரம் செய்யவிருக்கிறேன் என்றார் அவர். பேட்டியின்போது கட்சியின்மூத்தத்தலைவர்கள் அல்லம்வீரபத்ரப்பா, உக்ரப்பா, கே.சி.கொண்டையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி : கருணாநிதிக்கு அதிகாரம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது  என்பது குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், திமுக தலைவர் கருணாநிதிக்கும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் மேற் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களாவன :
 
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் வரவிருக்கின்ற 16வது நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அந்தத் தேர்தலில் கழகத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்கள். மேலும் எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கத் தலைவர்  கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கும் அதிகாரம் வழங்குவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் 2
2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று கருணாநிதி தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எவ்வாறு சேது சமுத்திரத் திட்டத்திற்கு மூடு விழா நடத்த எண்ணுகிறார்களோ - எப்படிப் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மூன்றாண்டுக் காலமாக இழுத்து மூடி வைத்திருக்கிறார்களோ - பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களோ - எப்படி செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும், பாவேந்தர் ஆய்வு நூலகத்தையும் சரியாக இயங்கவிடாமல் செய்திருக்கிறார்களோ - அதைப் போலவே இந்த மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்திட அ.தி.மு.க. ஆட்சியினர் நினைக்கிறார்கள்.
மதுரவாயல் - துறைமுகம் சாலையை நம்பி, ஏராளமான நிறுவனங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகளைத் தொடங்க திட்டமிட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சென்னை துறைமுகம்; திருப்பெரும்புதூர் அருகே 3,600 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய “கண்டெய்னர் டெர்மினலை” அமைக்க திட்டமிட்டிருந்தது. மேலும் 500 கோடி ரூபாய் செலவில் மற்றுமொரு உலர் துறைமுகப் பணிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இரண்டு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதுபோலவே தேசிய நெடுஞ் சாலைத் துறையைச் சார்ந்த 9,300 கோடி ரூபாய்க்கான 1,037 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைத் திட்டங்கள் பல காரணங்களால் தாமதிக்கப்பட்டுள்ளதாம்!
திண்டுக்கல் - தேனி - குமுளி சாலையை அகலப் படுத்தும் திட்டம் இன்னும் முடியவில்லை. 135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலைத் திட்டம் இந்த மாதத்திற்குள் முடிவடைந்திருக்க வேண்டும்.  சென்னை - திருப்பதி சாலையை அகலப்படுத்தும் திட்டம், ஆந்திர மாநிலப் பகுதியில் பணி முழுமை பெற்று விட்டது; ஆனால் தமிழகத்தில் அதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தால் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கும், மாநில அரசுக்கும் இடையே நீடிக்கும் இந்த வேறுபாடான நிலை காரணமாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மற்ற திட்டங்களும், 1,745 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைப் பணிகளும் குளறுபடியிலே உள்ளன.
காலதாமதம் காரணமாக எந்தெந்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றால், அக்டோபர் 2013இல் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை - திருப்பதி சாலை; அக்டோபர் 2011இல் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை - தடா சாலை; ஜூன் 2013இல் முடிவடைந்திருக்க வேண்டிய எண்ணூர் மணலி சாலை அபிவிருத்தி திட்டம்; செப்டம்பர் 2013இல் முடிவடைந் திருக்க வேண்டிய சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்; மே 2013இல் முடிவடைந் திருக்க வேண்டிய திருச்சி - காரைக்குடி சாலைத் திட்டம்; டிசம்பர் 2013இல் முடிவடைந்திருக்க வேண்டிய கிருஷ்ணகிரி - வாலாஜாபாத் சாலைத் திட்டம் போன்றவை பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மேற்கண்ட திட்டங்கள் தமிழகத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி இலட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்தால் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா அரசு இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்காமல் இருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஜெயலலிதா அரசின் இந்தப் போக்கினை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7 புதிய மாவட்டங்களை அறிவிக்கும் குஜராத்

Tuesday, August 13, 2013

அகமதாபாத்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, 7 புதிய மாவட்டங்களை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் அமுல் படுத்த முடிவு செய்துள்ளது குஜராத் அரசு. 
 
 ஏற்கனவே குஜராத்தில் 26 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது ‘ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்களை உருவாக்குவோம் என அறிவித்திருந்தார் மோடி. அதன் படி வெற்றி வாகை சூடி தற்போது முதலமைச்சராக வீற்றிருக்கும் மோடி,  தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் பொருட்டு,  புதிய மாவட்டங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அதனடிப்படையில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகளைப் பெற்று மாநில தலைமை செயலாளாரின் கண்காணிப்பில் இந்தக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. 
 
அம்மாவட்டங்களுக்கு ஆரவல்லி, போடாட், சோட்டா, உதய்பூர், மோர்பி, மஹிசாகர், கிர் - சோம்நாத், துவாரகா என பெயரிடப்பட்டுள்ளது. நாளை 67வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள வேளையில் இந்த புதிய மாவட்டங்கள் குறித்தான அறிவிப்பு அமல் படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய மாவட்டங்களின் வருகையால் குஜராத் மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Political News

Online jobs

Sports News

Business News

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.