ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 14வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. நேற்று இரவு நடந்த 100 மீ., ஓட்டத்தில் உலகின் "மின்னல் வேக' வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் பங்கேற்றார். இவர், கடந்த 2011ல் நடந்த உலக தடகளத்தில் தவறாக ஓடியதால் பதக்கத்தை கோட்டைவிட்டார்.
இதற்கு பரிகாரம் தேடும் வகையில் இம்முறை, மழையை பொருட்படுத்தாது அசுர வேகத்தில் ஓடிய போல்ட், 9.77 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இரண்டாவது இடம் பெற்ற அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின்(9.85 வினாடி) வெள்ளி பெற்றார். ஜமைக்காவின் மற்றொரு வீரர் நெஸ்டர் கார்டர்(9.95 வினாடி) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியா ஏமாற்றம்:
ஆண்களுக்கான 20 கி.மீ., நடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் இர்பான், குர்மீத் சிங், சந்தன் சிங் ஆகியோர் பங்கேற்றனர். லண்டன் ஒலிம்பிக்கில் 10வது இடம் பிடித்த இர்பான், 15 கி.மீ., தூரம் வரை 6வது இடத்தில் இருந்தார். ஆனால் தவறுதலாக ஓடியதால் பாதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான குர்மீத் சிங் (ஒரு மணி நேரம், 26 நிமிடம், 47 வினாடி) 33வது, சந்தன் சிங் (ஒரு மணி நேரம், 26 நிமிடம், 51 வினாடி) 34வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
இப்போட்டியில், பந்தய தூரத்தை ஒரு மணி நேரம், 20 நிமிடம், 58 வினாடியில் கடந்த ரஷ்யாவின் அலெக்சாண்டர் இவானோவ், 20, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் ரஷ்யாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீனாவின் டிங் சென் (ஒரு மணி நேரம், 21 நிமிடம், 09 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஸ்பெயினின் ஏஞ்சல் லோபஸ் (ஒரு மணி நேரம், 21 நிமிடம், 21 வினாடி) வெண்கலம் வென்றார்.
அரையிறுதியில் பிரேசர்:
நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்று ஆறு பிரிவுகளாக நடந்தது. நான்காவது பிரிவில் நடந்த தகுதிச் சுற்றில், பந்தய தூரத்தை 11.15 வினாடியில் கடந்த ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர்-பிரைசி முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இவர், லண்டன் ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
ஆறாவது பிரிவில் நடந்த தகுதிச் சுற்றில், அமெரிக்காவின் கார்மெலிட்டா ஜெட்டர், பந்தய தூரத்தை 11.24 வினாடியில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இவர், லண்டன் ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மற்றொரு பிரிவில் நடந்த தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் இங்கிலீஷ் கார்ட்னர் பந்தய தூரத்தை 10.94 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார். தவிர இவர், நேற்று நடந்த 100 மீ., தகுதிச் சுற்றில் சிறந்த ஓட்டத்தை பதிவு செய்தார். இன்று பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் அரையிறுதி மற்றும் பைனல் நடக்கிறது.
நீளம் தாண்டுதல்:
பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில், 7.01 மீ., தூரம் தாண்டிய அமெரிக்காவின் பிரிட்னி ரீஸ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். நைஜீரியாவின் பிளசிங் ஒகாக்பரி (6.99 மீ.,), செர்பியாவின் இவானா ஸ்பானோவிச் (6.82 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
சாதிப்பாரா விகாஸ்
இன்று நடக்கவுள்ள ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் விகாஸ் கவுடா பங்கேற்கிறார். மொத்தம் 29 பேர் பங்கேற்கும் தகுதிச் சுற்றில், 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் பைனலுக்கு முன்னேறலாம். சமீபத்தில், புனேயில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்திய இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மூக்குடைந்த சோகம்
வட்டு எறிதலில் பங்கேற்கும் தடகள வீராங்கனைகள் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, போலந்தின் ஜனேடா கிளான்க், வட்டு எறிதல் போல "ஜாலியாக' பயிற்சி செய்தார். அவரது கை, அருகில் இருந்த உக்ரைன் வீராங்கனை நதாலியா செமனோவா மூக்கின் மீது தாக்கியது. கனமான வட்டு பட்டதால், மூக்கு பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது. இரண்டு தையல் போடப்பட்ட நிலையில், இவருக்கு "ஆப்பரேஷன்' தேவையா என்பது குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
காயத்தை பொருட்படுத்தாது தகுதிப் போட்டியில் பங்கேற்ற நதாலியா, கடைசி இடமே பெற முடிந்தது. இவர் கூறுகையில்,""போட்டியில் பங்கேற்க வேண்டாம் என பயிற்சியாளர் அறிவுறுத்தினார். "இரும்பு பெண்' என்பதை நிரூபிக்கவே துணிச்சலுடன் பங்கேற்றேன்,''என்றார்.



0 comments:
Post a Comment