News Update :

ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா: வெடித்தது சர்ச்சை

Tuesday, August 13, 2013


Ronjan Sodhi, shooting
 
புதுடில்லி: ராஜிவ் "கேல் ரத்னா' விருதுக்கு ரஞ்சன் சோதியின் பெயரை பரிந்துரை செய்ததில் பெரும் சர்சசை வெடித்துள்ளது. கிருஷண் பூனியாவை புறக்கணித்து விட்டு இவரை தேர்வு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
விளையாட்டுத்துறையில் சாதிக்கும் நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ராஜிவ் "கேல் ரத்னா' விருதுக்கு ரஞ்சன் சோதியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், கேல் ரத்னா விருது பெறும் 7வது துப்பாக்கி சுடுதல் வீரர் என்ற பெருமை பெறுவார். முன்னாள் "நம்பர்-1' வீரரான இவர் தொடர்ச்சியாக இரண்டு உலக கோப்பை (2010, 2011) தொடரில் தங்கம் வென்றவர். தவிர, "டபுள் டிராப்' பிரிவில் ஆசிய போட்டி (2012), காமன்வெல்த் (2010) போட்டியில் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சிந்துவுக்கு விருது:
இதே போல, அர்ஜுனா விருதுக்கு 15 நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை 5-0 என வென்று தந்த கோஹ்லியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தவிர, உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்று சாதனை படைத்த, சிந்துவும் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். டில்லி காமன்வெல்த் (2010) போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தட்டிசென்ற தடகள வீரர் ரஞ்சித் மகேஸ்வரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அர்ஜுனா விருது பட்டியல்:
விராத் கோஹ்லி (கிரிக்கெட்), சிக்கோர்வோல் சுவரோ (வில்வித்தை), ரஞ்சித் மகேஸ்வரி (தடகளம்), சிந்து (பாட்மின்டன்), கவிதா சாகல் (குத்துச்சண்டை), ருபேஷ் ஷா (ஸ்னூக்கர்), ககன்ஜித் புல்லர் (கோல்ப்), சாபா அஞ்சும் (ஹாக்கி), ராஜ்குமாரி ரத்தோர் (துப்பாக்கி சுடுதல்), ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), மவுமா தாஸ் (டேபிள் டென்னிஸ்), நேகா ரதி (மல்யுத்தம்), தர்மேந்திரா தலால் (மல்யுத்தம்), அபிஜித் குப்தா (செஸ்), அமித் குமார் சரோகா (பாராலிம்பிக்).
தேர்வில் சர்ச்சை
 கேல் ரத்னா விருதுக்கு ரஞ்சன் சோதியை பரிந்துரை செய்தது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. முதலில் வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா, லண்டன் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய கிரிஷாவின் பெயரை தான் தேர்வுக்குழுவின் பெரும்பாலானோர் பரிந்துரை செய்துள்ளனர்.
இது குறித்து தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,""கிரிஷா, பூனியா இடையே தான் ஓட்டெடுப்பு நடக்க வேண்டுமென 10 பேர் முடிவு செய்தோம். இந்த நேரத்தில் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரான ஒரு உறுப்பினர் தாமதமாக வந்தார். இவர் வந்ததும், கிரிஷாவின் பெயர் நீக்கப்பட்டு சோதியின் பெயர் சேர்க்கப்பட்டது. சோதியின் பெயர் வருவதற்கு முன் பூனியாவுக்கு தான் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
பின் நடந்த ஓட்டெடுப்பில் கையை உயர்த்தி உறுப்பினர்கள் ஆதரவை தெரிவித்தனர். சோதி, பூனியாவுக்கு சம அளவில் ஓட்டு விழ, "டை' ஏற்பட்டது. அப்போது சில உறுப்பினர்கள் இருவரது பெயரையும் சேர்த்து பரிந்துரை செய்யலாம் என்றனர். இந்த நேரத்தில் இந்திய விளையாட்டு ஆணைய(எஸ்.ஏ.ஐ.,) அதிகாரிகள் சோதிக்கு ஆதரவு தெரிவிக்க, அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. உண்மையில் எஸ்.ஏ.ஐ., அதிகாரிகளுக்கு ஓட்டு அளிக்கும் உரிமையே கிடையாது. கேல் ரத்னா போன்ற உயரிய விருதில் அரசியல் விளையாடியது பெரும் அவமானமானது,''என்றார்.
இதனை மறுத்த மற்றொரு உறுப்பினர், சோதியை ஒருமனதாக தேர்வு செய்ததாக தெரிவித்தார். தேர்வுக்குழுவின் தலைவர் பெரேரா கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
பூனியா போர்க்கொடி
கிருஷ்ண பூனியா கூறுகையில்,""எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும். அவரை நேரில் சந்தித்து புகார் அளிக்க முயற்சிப்பேன். கேல் ரத்னா விருது பெற எனக்குத் தான் தகுதி உள்ளது. டில்லி, காமன்வெல்த் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை நான் தான். தவிர. ஒலிம்பிக்கில் 6வது இடம் பெற்றேன்,'' என்றார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.