News Update :

புதுமையான இந்தியன் பாட்மின்டன் லீக்: இன்று டில்லியில் ஆரம்பம்

Tuesday, August 13, 2013


saina, badmintom, india
 
புதுடில்லி:  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடர் இன்று டில்லியில் துவங்குகிறது. இதில், செய்னா, சிந்து உள்ளிட்ட இந்திய வீராங்கனைகளுடன் சேர்ந்து வெளிநாட்டு நட்சத்திரங்களும் அசத்த காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் "டுவென்டி-20' போட்டிகள் பிரபலம் அடைந்தது. இதே பாணியில் இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர், இன்று டில்லியில் ஆரம்பமாகிறது. இதில் மும்பை, டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட, 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 36 இந்திய வீரர்கள், 24 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொடருக்கான ஏலத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்தன.
ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா உள்ளிட்ட பலர், தங்களுக்கு குறைந்த தொகை வழங்கப்பட்டதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி பல்வேறு சர்ச்சைகளை கடந்து, பாட்மின்டன் லீக் தொடரின், துவக்கவிழா இன்று மாலை 6.30 மணிக்கு டில்லியில் கோலாகலமாக நடக்கிறது.
யார் எங்கே:
இந்தியாவின் முன்னணி நட்சத்திரம் செய்னா நேவல், ஐதராபாத் அணி கேப்டனாக உள்ளார். தவிர, இந்தோனேஷியாவின் தவுபிக் ஹிதாயத், இந்தியாவின் அஜய் ஜெயராம், தருண் கோனா, பிரத்னயா காத்ரே உள்ளிட்டோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
சிந்து வாரியர்ஸ்:
சமீபத்தில் முடிந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, அவாத் வாரியர்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். தவிர, உலகின் "நம்பர்-1' வீரர் மலேசியாவின் லீ சொங் வெய், மும்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.
பலமான புனே:
புனே அணியைப் பொறுத்தவரையில் அஷ்வினி பொன்னப்பா தலைமையில் களமிறங்குகிறது. இவருடன் அனுப் ஸ்ரீதர், சவுரப் வர்மா, அருண் விஷ்ணு, சனவே தாமஸ், ரூபேஷ் குமார் என, பிரபலமான வீரர்கள் இடம் பெற்றிருப்பது பெரிய பலம்.
ஜுவாலா கேப்டன்:
பெங்களூரு அணி காஷ்யப், அரவிந்த் பட், அபர்னா பாலனை நம்பி களம் காணுகிறது. டில்லி அணியின் கேப்டனாக ஜுவாலா கட்டா உள்ளார். சமீபத்தில் 14 கி.கி., வரை எடை குறைத்துள்ள இவருடன், கலப்பு இரட்டையரில் திஜு பங்கேற்கிறார்.
போட்டிகள் எப்படி:
போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் <உள்ளூர் மற்றும் வெளியூர் என, இரு முறை மோதும். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடக்கும்.
பெண்கள் இரட்டையர் போட்டி கிடையாது. மொத்தம் 90 போட்டிகள் நடக்கும். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள், ஐதராபாத் (ஆக. 28), பெங்களூருவில் (ஆக. 29) நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறும். ஆக., 31ல் மும்பையில் பைனல் நடக்கவுள்ளது.
இன்று நடக்கும் முதல் மோதலில் ஜுவாலா கட்டாவின் டில்லி அணி, அஷ்வினி பொன்னப்பாவின் புனே அணியை சந்திக்கிறது.
துவக்க விழா
பாட்மின்டன் லீக்கின் துவக்க விழா இன்று மாலை டில்லியில் நடக்கிறது. இதில் வழக்கமான நடனம், பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் களை கட்டவுள்ளன.
புதிய முறை 
பொதுவாக பாட்மின்டன் போட்டிகளில் முதல் 11 புள்ளி எடுத்தவுடன் 2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, 7, 14 புள்ளி எடுத்தவுடன், தலா ஒரு நிமிடம் ஓய்வு தரப்படும். தவிர, மூன்றாவது "செட்' வழக்கமான 21 புள்ளிகளுக்கு பதிலாக 11 புள்ளியுடன் முடிந்துவிடும். இதில் 6 புள்ளி எடுத்தவுடன் ஓய்வு வழங்கப்படும்.
ரூ. 6 கோடி பரிசு
பாட்மின்டன் லீக் தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 6 கோடி பரிசு கிடைக்கும்.
அணிகள் விவரம்
பாட்மின்டன் லீக் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதன் விவரம்:
மும்பை மாஸ்டர்ஸ், டில்லி ஸ்மாஷர்ஸ், புனே பிஸ்டன்ஸ், ஐதராபாத் ஹாட்ஷாட்ஸ், பெங்களூரு பங்கா பீட்ஸ், லக்னோ அவாத் வாரியர்ஸ்
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.