குவாங்சு: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தோல்வி கண்ட இளம் இந்திய வீராங்கனை சிந்து வெண்கலம் வென்றார்.
சீனாவில் உள்ள குவாங்சு நகரில், 20வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் "நம்பர்-12' இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, "நம்பர்-3' வீராங்கனையான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 10-21 என கோட்டைவிட்ட சிந்து, இரண்டாவது செட்டை 13-21 என இழந்தார். 36 நிமிடங்கள் நடந்த அரையிறுதியின் முடிவில் சிந்து 10-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இருப்பினும், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
இதன்மூலம் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார் சிந்து. இது, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது வெண்கலப் பதக்கம். முன்னதாக இந்தியாவின் பிரகாஷ் படுகோனே (பிரிவு-ஒற்றையர், 1983, இடம்-டென்மார்க்), ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா (பிரிவு-பெண்கள் இரட்டையர், 2011, இடம்-லண்டன்) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.



0 comments:
Post a Comment