News Update :

தவான் சாதனை: 248 ரன்கள் விளாசினார்: பைனலில் இளம் இந்தியா

Tuesday, August 13, 2013



Shikar Dhawan, India A, 248 Runs
 
பிரிட்டோரியா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய "ஏ' அணி பைனலுக்கு முன்னேறியது. இதில், 248 ரன்கள் விளாசிய தவான், 50 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இவர், சேவக் (219), சச்சின் (200) சாதனையை தகர்த்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய "ஏ' அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக ஆஸ்திரேலிய "ஏ' அணி விளையாடுகிறது. மூன்று போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பைனலுக்கு முன்னேறியது. தலா ஒரு வெற்றியை பதிவு செய்த இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள், பிரிட்டோரியாவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் புஜாரா, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
தவான் அபாரம்: இந்திய அணிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது முரளி விஜய் (40) அவுட்டானார். கேப்டன் புஜாராவுடன் இணைந்த ஷிகர் தவான், அதிரடியாக ரன் சேர்த்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய தவான், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். வில்ஜோயன், மெர்வி பந்தில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த தவான், 86வது பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து அசத்திய தவான், திரான், வில்ஜோயன், ஹென்டிரிக்ஸ் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஹென்டிரிக்ஸ், ஜார்ஸ்வெல்டு வேகத்தில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த தவான், இரட்டை சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்த்த போது, 150 பந்தில் 248 ரன்கள் (30 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்த ஷிகர் தவான் அவுட்டானார்.
புஜாரா சதம்: அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (6) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய புஜாரா, தன்பங்கிற்கு சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 433 ரன்கள் குவித்தது. புஜாரா (109), தினேஷ் கார்த்திக் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹென்டிரிக்ஸ் சதம்: சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஹென்டிரிக்ஸ், ராசவ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த போது ராசவ் (43) அவுட்டானார். அடுத்து வந்த எல்கார் (15) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஹென்டிரிக்ஸ் 78 பந்தில் 106 ரன்கள் (2 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். கேப்டன் ஆன்டாங் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். விலாஸ் (2) நிலைக்கவில்லை.
ஜார்ஸ்வெல்டு அசத்தல்: பொறுப்பாக ஆடிய வான் ஜார்ஸ்வெல், தன்பங்கிற்கு சதம் அடித்தார். இவர், 108 ரன்களுக்கு வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மெர்வி (36) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மற்ற வீரர்கள் ஏமாற்ற, தென் ஆப்ரிக்க அணி 48.4 ஓவரில் 394 ரன்களுக்கு "ஆல்-அவுட்'டாகி தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் ஈஷ்வர் பாண்டே 4, உனத்கத் 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. பிரிட்டோரியாவில் நாளை நடக்கவுள்ள பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

21 ரன்னில் நழுவிய வாய்ப்பு
 தவான், கூடுதலாக 21 ரன்கள் எடுத்திருந்தால், 50 ஓவர் மற்றும் "ஏ' தர போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனை படைத்திருக்கலாம். 248 ரன்னில் அவுட்டான இவர், இப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.
"ஏ' தர போட்டிகளில்(ஒருநாள் போட்டி சேர்த்து) ஒரு இன்னிங்சில் இரட்டை சதம் அடித்தவர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு இடம்
பிரவுன் (சர்ரே) 268 கிளாமார்கன் 2002 ஓவல்
தவான் (இந்திய "ஏ') 248 தெ.ஆப்ரிக்க "ஏ' 2013 பிரிட்டோரியா
போலக் (கிழக்கு புரோவின்ஸ்) 222* பார்டர் 1974 கிழக்கு லண்டன்
ஹவ் (மத்திய டிஸ்டிரிக்ட்ஸ்) 222 வடக்கு டிஸ்டிரிக்ட்ஸ் 2013 ஹாமில்டன்
சேவக் (இந்தியா) 219 வெஸ்ட் இண்டீஸ் 2011 இந்தூர்
முகமது அலி (பாக்., கஸ்டம்ஸ்) 207 டிபென்ஸ் ஹவுசிங் 2005 சியால்கோட்
காளிச்சரண் (வார்விக்ஷயர்) 206 ஆக்ஸ்போர்டுஷயர் 1984 பர்மிங்காம்
காலித் லத்திப் (டால்பின்ஸ்) 204* குயிட்டா பியர்ஸ் 2009 கராச்சி
பிரவுன் (சர்ரே) 203 ஹாம்ப்ஷயர் 1997 குயில்டுபோர்டு
பாரோவ் (நடால்) 202* ஆப்ரிக்க லெவன் 1975 டர்பன்
போபரா (எசக்ஸ்) 201* லீசெஸ்டர் 2008 லீசெஸ்டர்
வெல்ஸ் (லீசெஸ்டர்) 201 பெர்க்ஷயர் 1996 லீசெஸ்டர்
சச்சின் (இந்தியா) 200* தென் ஆப்ரிக்கா 2010 குவாலியர்

அதிகபட்ச ஸ்கோர்
நேற்று 433 ரன்கள் குவித்த இந்திய "ஏ' அணி, 50 ஓவர் மற்றும் "ஏ' பிரிவு போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் 6வது இடம் பிடித்தது. முதலிடத்தில், 2007ல் ஓவல் மைதானத்தில் நடந்த குளோக்ஸ் அணிக்கு எதிராக 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 496 ரன்கள் குவித்த சர்ரே அணி உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் இலங்கை (443/9, எதிர்-நெதர்லாந்து, 2006), தென் ஆப்ரிக்கா (438/9, எதிர்-ஆஸ்திரேலியா, 2006) அணிகள் உள்ளன.

பயிற்சியாளர் மகிழ்ச்சி
தவானின் பயிற்சியாளர் மதன் சர்மா கூறுகையில், ""தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஷிகர் தவான் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அனுபவம், அடுத்து வரவுள்ள தென் ஆப்ரிக்க தொடரில் சாதிக்க உதவும். பொதுவாக தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால், அடுத்து நடக்கவுள்ள தொடரிலும் இவர் நிச்சயம் சாதிப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.