News Update :

சுதந்திர தினம் முன்னிட்டு தமிழகத்தில் தீவிர சோதனை

Tuesday, August 13, 2013

சென்னை:"சுதந்திர தினத்தன்று, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என, மத்திய உளவுத் துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், போலீசார், உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவிதம் நடந்து விடாமல் தடுக்க, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.நாட்டின், 67வது சுதந்திர தினம், நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று, முக்கிய நகரங்களில், பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதல் நடத்தி, அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக, மத்திய உளவுத் துறைக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது.இந்தத் தகவல், மத்திய உள்துறை வாயிலாக, அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொத்தளத்தில், முதல்வர் ஜெயலலிதா, காலை, 9:00 மணிக்கு, தேசியக் கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்புரையாற்றுகிறார். விழாவிற்கான, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 

தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட நால்வரும், தமிழகத்தைச் சீர்குலைக்கலாம் என்ற, ரகசியத் தகவல் அடிப்படையிலும், தமிழகத்தில் சுதந்திர தினத்தைக் குலைக்க, பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக, மத்திய உளவுத் துறை எச்சரித்தது.இதையடுத்து, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை, முதல்வர் கலந்து கொள்ளும், சுதந்திர தின விழா நடப்பதால், ஐந்து கூடுதல் கமிஷனர்கள் தலைமையில், நகர் முழுவதும், 14ஆயிரம் போலீசாரை கொண்டு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடலோரப் பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த வீரர்கள், பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடல் வழியில் யாரேனும் ஊடுருவாமல் தடுக்க, மீனவர்களும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.இதைத்தவிர, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள, அனைத்து சோதனைச் சாவடிகளும், உஷார் படுத்தப்பட்டு, கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். வன எல்லைப் பகுதிகளும், வனத் துறையினரைக் கொண்டு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில், விடுப்பில் சென்றுள்ள போலீசார் அனைவரும், பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளனர். ஐந்தடுக்கு:டி.ஜி.பி., ராமானுஜம் தலைமையில், போலீஸ் உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து, பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும், விமான நிலையங்களில், ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும்


பேருந்து நிலையங்களில், பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளை வரவேற்கவும், வழியனுப்பவும் வரும் உறவினர்கள், ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படவில்லை. ரயில் மற்றும் பேருந்துகளில் வரும் அனைத்து சரக்குகளும் சோதனையிடப்படுகின்றன. ரயில்வே போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து, சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.காவல் துறை தலைமை உத்தரவுப்படி, மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், கோவில்கள், கடற்கரைப் பகுதிகள், "ஷாப்பிங் மால்'கள் ஆகியவற்றில், போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கோவில்களில், கடும் சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று காலை முதலே, வாகன தணிக்கைக்கும், தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் சோதனைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் படி சுற்றித்திரிபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தந்தப் பகுதியில் உள்ள நுண்ணறிவு மற்றும் உளவுப் பிரிவினர், புதிய நபர்கள் யாரேனும் ஊடுருவி உள்ளனரா என்பதைக் கண்காணித்து வருகின்றனர்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.