News Update :

இந்தியாவை குற்றம் சாட்டும் பாகிஸ்தான்

Tuesday, August 13, 2013

புதுடில்லி:இந்தியாவின் மீது குற்றம் சாட்டி பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ள தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் மீறல்:போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 ராணுவ வீரர்களின் தலையை வெட்டி துண்டித்து படுகொலை செய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது 5 இந்திய வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளது.
பொய் பிரசாரம்:இதுதொடர்பாக இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழும்பி வரும் வேளையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அந்நாட்டின் பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் கொல்வதாக குற்றம் சாட்டி, இதனை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷரீப் பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளார் .
புதிய துவக்கம் வேண்டும்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான சூழ்நிலையில் நட்புறவுடன் தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. இதன் மூலம் ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு இந்திய ராணுவ வீரர்களின் அத்துமீறல்தான் காரணம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹமித் பார்லிமென்டில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவாடேகர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியது கண்டிக்க தக்கது என்றார்.
எல்லைப் பகுதியில் நடந்து வரும் அத்து மீறல்களுக்கும், படுகொலைகளுக்கும் காரணமான பாகிஸ்தான், இந்தியா மீது பழி சுமத்தி கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது ஆகும். இதனை இந்தியா உடனடியாக கண்டிக்க வேண்டும். இந்த தீர்மானத்தின் மூலம் பாகிஸ்தானின் நோக்கம் இந்தியாவை எதிர்ப்பது தான் என்பது தெளிவாகியுள்ளது என்றார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.