News Update :

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம்

Friday, August 16, 2013

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடி, மதுவில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே இன்று இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கு பா.ம.க.தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

மக்களைக் காக்க மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக போராடியும் தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் திராவிடக்கட்சிகள் செவிமடுக்க மறுக்கின்றன. எனினும் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயப்போவதில்லை. மது ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்குடன் விடுதலை நாளன்று அனைத்து ஊர்களிலும் கூடும் கிராமசபைகளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பொதுமக்களுக்கு  வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
அதையேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில்  விடுதலை நாளையொட்டி நேற்று நடந்த கிராமசபைக் கூட்டங்களில், தங்களது பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தீர்மானங்களை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். 2000க்கும் அதிகமான கிராம சபைகளில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் பெண்கள் பெருமளவில் கூடி மதுவிலக்கு கோரும் தீர்மானத்தை மகிழ்ச்சி குரல் எழுப்பி ஆதரித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் ஊராட்சியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய பொதுமக்களை பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்து பாராட்டினார். மிகக் குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு கிராமசபைகளில் மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுவிலக்கிற்கு எதிரான இந்த மக்கள் இயக்கம், இதே வேகத்துடன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களின் போது தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டு நாள் இடைவெளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமசபைகளில் மதுவிலக்கிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதில் இருந்தே மதுவுக்கு எதிரான மக்களின் மனநிலையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தில் புதிய மதுக்கடை திறக்கக்கூடாது என்று அக்கிராம ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அங்கு மதுக்கடையை திறக்க தமிழக அரசு முயன்றது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, ஓர் ஊரில் மதுக்கடை வேண்டாம் என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 எனவே மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மதித்து அந்தந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை  உடனடியாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.