News Update :

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேச மோடிக்கு அழைப்பு

Tuesday, August 13, 2013

லண்டன்:பிரிட்டன் பார்லிமென்டில் உரையாற்ற, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் தொழிலாளர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

குஜராத்தில், 2002ம் ஆண்டு, நடந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். "இதற்கு, மாநில முதல்வர் மோடி தான் காரணம்' என, மத்திய அரசு குற்றம் சாட்டியது. அவர் மீது, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "மோடிக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை' எனக் கூறி, அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், மோடிக்கு விசா வழங்க மறுத்தன. கடந்த ஆண்டு, குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள், "மோடிக்கு விசா வழங்குவது குறித்து, பரிசீலிக்கப்படும்' என, தெரிவித்தனர். இதே போன்ற கருத்தை, பிரிட்டன் அரசும் வெளியிட்டது.

இந்நிலையில், வரும் பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறும் பட்சத்தில், கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மோடி, பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இதையடுத்து, "மோடிக்கு விசா வழங்க வேண்டாம்' என, இந்திய எம்.பி.,க்கள் சிலர் கையெழுத்திட்ட கடிதம், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அனுப்பப்பட்டது.எனினும், "மோடி, விண்ணப்பித்தால், விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என, அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், பிரிட்டன் பார்லிமென்டில் பேசுவதற்காக, மோடிக்கு, அந்நாட்டின், தொழிலாளர் கட்சியின் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர், பேரி கார்டினர், "நவீன இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் உரையாற்ற, மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பேரி கூறியதாவது:குஜராத் முதல்வர் மோடிக்கும், எங்கள் கட்சிக்கும் உள்ள நீண்ட கால உறவின் அடிப்படையில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த மக்களும், மோடியை சந்திக்கவும் அவரது உரையை கேட்கவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.மோடி, யாராலும் புறக்கணிக்க முடியாத சிறந்த அரசியல் தலைவர். நரேந்திர மோடி, குஜராத்தின் சிறந்த முதல்வர் மற்றும் பிரதமர் பதவிக்கு அனைத்து தகுதிகளையும் உடைய தலைவர் என்பதில், இரு வேறு கருத்துக்களே கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.

தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும், பிரிட்டன் எம்.பி.,யுமான, ஸ்டீபன் பவுண்ட் குறிப்பிடுகையில், ""எங்கள் கட்சி உறுப்பினர்கள், மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஒரு சிறந்த தலைவர். நீண்ட இடைவெளிக்குப் பின் மோடியை, சந்திக்க மிக ஆவலுடன் இருக்கிறேன்,'' என, கூறினார். அக்கட்சியின் துணைத் தலைவர், சைலேஷ் வாராவும், இதே கருத்தை முன் மொழிந்துள்ளார். வாரா, மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், ""எங்கள் அழைப்பை ஏற்று, இங்கு வருவீர்கள் என நம்புகிறேன்,'' என, குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, கன்சர்வேடிவ் கட்சியும், மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு, பிரிட்டன் கட்சிகள் விடுத்துள்ள இந்த அழைப்பினால், அதிருப்தியாளர்கள் பலரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.