News Update :

பட்டினிப்போர் நடத்தியவர்களைக் கைது செய்வதா? வைகோ கண்டனம்

Friday, August 16, 2013

கோவை வெள்ளலூர் பகுதியில் சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்தி பட்டினிப் போர் நடத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கினால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
தினமும் 800 டன் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக (சுமார் 70,000 மக்கள்) வசிக்கின்ற பகுதிகளை ஒட்டி இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோதே அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கருத்துகளைக் கேட்காமலும், சுற்றுசூழல் விதிகளுக்குப் புறம்பாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கொண்டு வந்து, எந்தப் பாதிப்பும் இல்லாதவாறு குப்பைக் கிடங்கை மேலாண்மை செய்து விடுவோம் என்று மாநகராட்சி பலமுறை உறுதி அளித்தது.
ஆனாலும் கூட, இதுவரை 40 முறைக்கும் மேலாக பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருக்கின்ற மக்கள் வசிக்க முடியாமல் வெளியேறுகின்ற நிலை ஏற்பட்டது.  துர்நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அங்குள்ள நிலத்தடி நீரை ஆய்வு செய்து பார்த்ததில், அந்த நீர் பயன்படுத்த முடியாத நீராக மாறிவிட்டதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு அறிக்கை தந்து இருக்கின்றது. நீர் மஞ்சள் நிறமாக மாறிவிட்டது.
அதனால் இதற்கு நிவாரணம் வேண்டியும், தாங்கள் வசிக்கும் பகுதியில் நீர், நிலம், காற்று அனைத்துமே மாசு அடைந்து உள்ள நிலையில் தவிக்கும், மக்கள் ஜனநாயக முறையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது டேனியல், ஆனந்தி, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், அமர்நாத் ஆகிய 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவந்தனர். அவர்கள் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டும் கூட மாநகராட்சிகள் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ளவர்கள், அந்த 5 பேரைச் சந்திக்க முடியாது என்றே தெரிவித்தனர். தற்போது, அவர்களை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இதற்கு ம.தி.மு.கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அந்தப் போராட்டக் குழுவினரிடம் மாநகராட்சியும், அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குப்பைக்கிடங்கை மத்திய அரசின் சுற்றுசூழல் விதிகளின்படி, மக்கள் வசிப்பிடங்களுக்குத் தொலைவான பகுதியில் அமைக்க வேண்டும். இதில் தமிழக அரசு தலையிட்டு, உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.